மதுரை மல்லிகை கிலோ ரூ.2,300ஆக உயர்வு ; கடும் விலையேற்றத்தால் பொதுமக்கள் அதிருப்தி

Author: Babu Lakshmanan
4 September 2022, 12:20 pm

மதுரை மலர் சந்தையில் மதுரை மல்லிகையின் விலை கிலோ 2300 ஆக எகிறியது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி. ஒரு நாட்கள் இந்த விலையேற்றம் தொடரும் என வியாபாரிகள் கருத்து.

மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி மதுரை அருகே உள்ள திண்டுக்கல் தேனி விருதுநகர் சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

குறிப்பாக மதுரை மல்லி நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கு மேல் இங்கு விற்பனை ஆகிறது. அதுமட்டுமன்றி மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை உள்ளது. மதுரை விமான நிலையம் மூலமாக நாள் தோறும் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக மதுரை மல்லிகையின் வரத்து குறைந்துள்ளது. மதுரை மல்லிகை ரூ.2,300, பிச்சி ரூ.700, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200, செண்டுமல்லி ரூ.80 என அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது.

இது குறித்து மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் வரத்து மிக குறைவாக உள்ளது. மேலும் தற்போது அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் இருக்கின்ற காரணத்தால் பூக்களின் விலை உயர்வாக உள்ளது இது மேலும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் என்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி