காவு வாங்கியதா மாட்டுத்தாவணி தோரண வாயில்? தூண் விழுந்து ஜேசிபி ஆபரேட்டர் பலியான சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan13 February 2025, 10:58 am
மதுரையின் பிரதான பேருந்து நிலையமான மாட்டுத் தாவணி, மதுரை to மேலூர் சாலையில் அமைந்துள்ளது. மாட்டுத் தாவணி வெளிபுறம், ஆம்னி பேருந்து நிலையம் முன்பு, போக்குவரத்து நிறைந்த மேலூர் சாலையில் உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டின் போது, மதுரையில் அமைக்கப்பட்ட நக்கீரன் தோரணவாயில் அமைந்துள்ளது.
இதையும் படியுங்க: குறைந்த வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
கடந்த வருடம் இந்த மேலூர் சாலை, போக்குவரத்து தெரிசலைக் குறைக்க அகலப்படுத்தப்பட்டது. அப்போது இந்த தோரணவாயிலை இடிக்க, சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கும் தொடர்ந்தனர்.
ஆனால் போக்குவரத்து நெரிசலைக் கருதி அதனை இடிக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று இரவு அதனை இடிக்கும் பணி JCB இயந்திரத்தைக் கொண்டு தொடங்கியது.
இடிக்கும் போது எதிர்பாராத விதமாக, தோரணவாயில் JCB இயந்திரம் மேல் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்தில் JCB ஆப்ரேட்டர், மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த நாகலிங்கம் பலியானார்.
ஒப்பந்ததாரர் நல்லதம்பி இடிபாடுகளில் சிக்கி கொண்டார். விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் நாகலிங்கம் உடலை மீட்டு, அமரர் ஊர்தி மூலம் மதுரை ராசாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இச்சம்பவம் மாட்டுத் தாவணி பேருந்து நிலைய பகுதியில் பரபரப்பையும், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.