மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழா கோலாகலம்; பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு!!
Author: Babu Lakshmanan6 December 2022, 8:24 pm
மதுரை ; மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழாவையொட்டி, கோயில் பொற்றாமரை குளம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா டிச., 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தினமும் காலை , மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
இந்நிலையில், இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவில் பொற்றாமரை குளம் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெற்றது. இதில், கோயில் பணியாளர்கள் பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று பொற்றாமரைக்குளம், அம்மன் , சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல்விளக்குகள் மூலம் லட்சதீபங்களை ஏற்றினர்.
இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. தொடர்ந்து சித்திரை வீதியில் அம்மன் சன்னதி முன்பாகவும், சுவாமி சன்னதி முன்பாகவும் என இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. உபய தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேங்கள் எதுவும் நடைபெறாது என திருக்கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.