சாலையை ஆக்கிரமித்து பூட்டு போட்ட மர்ம நபர் : நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்..!!
Author: Babu Lakshmanan25 August 2022, 4:13 pm
மதுரை : மதுரையில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் அய்யனார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை பகுதியான ராணி மங்கம்மாள் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததோடு, இரும்பு கதவு போட்டு சாலையை அடைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ராணி மங்கம்மாள் சாலை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராணி மங்கம்மாள் சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சாலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர், மற்றும் வட்டாட்சியரிடம் பலமுறை மனுக்களை கொடுத்த நிலையில், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆண்டார் கொட்டாரம் பகுதியில் இருந்து கருப்பாயூரணி செல்லும் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தாசில்தார் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பாயூரணி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல் துணை காண்காணிப்பாளர் பிரியதர்சினி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கொடுத்த உறுதியின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
0
0