சுற்றி வளைத்த போலீசார்… அரிவாளை கையில் எடுத்த வழிப்பறி கொள்ளையன்… திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம் ; மதுரையில் பரபரப்பு..!!!

Author: Babu Lakshmanan
10 நவம்பர் 2023, 8:51 காலை
Quick Share

பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்ய முயன்றபோது. அரிவாளால் வெட்டி தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் காவலர்கள் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் கூடல்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தபால்தந்தி நகர் பகுதியில் கடந்த 4ஆம் தேதி மகாத்மா காந்தி நகர் பகுதியை சேர்ந்த லதா (44) என்ற பெண் இரவு பணி முடித்துவிட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் பைக்கில் வந்த இருவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை வழிப்பறி செய்தனர்.

அப்போது, அந்த பெண் சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று தபால்தந்திநகர் பகுதியில் செயின் வழிப்பறி சம்பவ வழக்கில் தேடப்பட்ட செல்லூரைச் சேர்ந்த நாகராஜன் (48) என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, செயின் பறிப்பு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான காளவாசல் அருகே சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (21) என்பவர் மதுரை செல்லூர் களத்துப்பொட்டல் பகுதியில் பதுங்கியிருப்பதாக செல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, செல்லூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ரஞ்சித்குமார், ஆய்வாளர் ஆறுமுகம் ஆகிய இருவரும் கைது செய்ய சென்றுள்ளனர். அப்போது குற்றவாளி ஸ்டீபன் ராஜ் செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரஞ்சித்குமாரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கையில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றுள்ளான்.

அப்போது, தற்காப்பு காரணத்திற்காக ஆய்வாளர் ஆறுமுகம் ஸ்டீபன்ராஜின் கணுக்காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்து கீழே விழுந்த நிலையில் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபோன்று கையில் காயமடைந்த சார்பு ஆய்வாளரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி ஸ்டீபன் ராஜ் மீது ஏற்கனவே கலைநகர், நாராயணபுரம், நத்தம் மேம்பாலம், செல்லூர் ஆகிய பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. செயின் பறிப்பு குற்றவாளி மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த சார்பு ஆய்வாளர் ரஞ்சித்குமாரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார். கைது செய்யப்பட்ட குற்றவாளி ஸ்டீபன் ராஜ் இன்று காலையில் செயின் பறிப்பு சம்பவம் ஒன்றில் ஈடுபட முயற்சி செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேசியபோது :-கடந்த 4ஆம் தேதி தபால்தந்தி நகர் பகுதியில் லதா என்ற பெண்ணிடம் செயினை பறித்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஸ்டீபன் ராஜ் மீது பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது

இந்த நிலையில் இதே போன்று மற்றொரு வழிப்பறி சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்டீபன் ராஜை காவல்துறை கைது செய்ய முயன்றபோது, அவரை அரிவாளால் வெட்டி தாக்க முயன்றால் அப்போது அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காக அவரது முழங்காலில் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்து கைது செய்துள்ளோம். தற்பொழுது குற்றவளி ஸ்டீபன்ராஜ் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஸ்டிபன்ராஜ் மீது பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த நான்காம் தேதி அன்று நடைபெற்ற சம்பவத்தில் மழை பெய்தபோதும் பெண்ணை செயினை வழிப்பறி செய்து இழுத்துச் சென்ற சம்பவத்தால் குற்றாவளியை கைது செய்வதற்கான தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்

மேலும், குற்றவாளி ஸ்டீபன்ராஜ் தாக்கியதில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் ரஞ்சித்தும் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரும் நல்ல உடல்நிலையில் உள்ளனர், என்றார்.

  • seeman vs vijay கேவலப்படுத்திய சீமான்… கூடிய கூட்டம் : விஜய் எடுத்த அதிரடி முடிவு..நாளை முக்கிய அறிவிப்பு!
  • Views: - 394

    0

    0