விசாரணைக் கைதியான திமுக பிரமுகருக்கு செல்போன் கொடுத்த விவகாரம் ; இரு காவலர்கள் பணியிடை நீக்கம்
Author: Babu Lakshmanan3 April 2023, 8:26 am
மோசடி வழக்கில் சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வந்த திமுக நிர்வாகிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் இரு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் விசாரணை சிறைவாசிகள் நீதிமன்ற வழக்கு வாய்தாவுக்காக காவல்துறையினர் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது வழக்கம். அப்போது, கைதிகளுக்கு செல்போன் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பதாக கூறி பணம்பெறுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
அந்த வகையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பாக OLX மொபைல் ஆப் மூலம் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே வீட்டை ஒத்திக்கு விடுவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த திமுக நிர்வாகி ஸ்ரீ புகழ் இந்திரா என்பவர் மதுரை மாவட்டம் மேலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
15 நாள் நீதிமன்ற காவல் முடிய உள்ள நிலையில், காவல்நீட்டிப்புக்காக வழக்கு விசாரணைக்கு சிறையில் இருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு காவல்துறை மூலம் அழைத்து வரப்பட்டார்.
மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக காத்திருந்த திமுக நிர்வாகி ஸ்ரீ புகழ் இந்திரா காவல்துறையினர் முன்பாகவே செல்போன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பணியின்போது அலட்சியமாக இருந்ததாக காவலர்கள் அய்யனன், சுரேஷ்கார்த்திக் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் நரேந்திரன் நாயர் நடவடிக்கை எடுத்துள்ளார்.