சாயக்கழிவுகளால் மாசுபடும் கண்மாய்… மலை போல் காட்சியளிக்கும் நுரை : நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி…?
Author: Babu Lakshmanan7 November 2023, 4:14 pm
மதுரை அயன் பாப்பாக்குடி கண்மாயிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறி, மலை போல் காட்சியளிக்கும் நுரையை வாகன ஓட்டிகள் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.
மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள அயன்பாப்பாகுடி கண்மாய் தண்ணீர் மூலமாக அவனியாபுரம், வெள்ளக்கல், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். மதுரையில் கடந்த சில நாட்கள் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த அயன்பாப்பாகுடி கண்மாய் நிரம்பி தண்ணீர் விவசாய பாசன கால்வாயில் செல்கிறது.
இந்த கண்மாயில் வெள்ளைக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த அயன் பாப்பாக்குடி கன்வாயில் கலப்பதாலும் கண்மாய் ஆகாயத்தாமரை நிரைந்த தேங்கிய நீருடன் தற்போது பெய்து வரும் மழைநீரும் கலந்து வருவதால் பாசன கால்வாய் வழியாக தண்ணீருடன் வெண்ணிற நுரை உருவாகி வருகிறது.
இதனால் பாசன கால்வாயில் வெண்ணிற மலை போன்று நுரை காட்சியளிக்கிறது. இந்த பாசன கால்வாய் வழியாக நுரையானது துர்நாற்றும் விசும் தண்ணீர் விவசாய நிலத்திற்கு செல்வதால் விவசாயிகள் குழப்பத்துடன் கூடிய அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும், இந்த மலை போல் இருக்கும் இந்த நுரை காற்றில் பறந்து அருகில் உள்ள மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் செல்வதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த அயன் பாப்பாக்குடி கண்மாயில் மழை வரும்போது, எல்லாம் கண்மாயில் தேங்கிய கழிவு நீருடன் மழை நீர் கலந்து இந்த கால்வாய் வழியாக வரும் தண்ணீர் வெண்ணிற நுரை போன்று காட்சியளிப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது.
தொடர்ச்சியாக இதற்கான செய்திகள் பதிவிட்டாலும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், இதனால் பெருகிவரும் நுரை மழை போல் காட்சியளிப்பதால், இதனை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகைப்படம் மற்றும் செல்பிக்களை எடுத்து செல்கின்றனர்.
அயன் பாப்பாக்குடி கண்மாயில் தொடர்ச்சியாக நுரை வருவதற்கான காரணம் தெரியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால், பொதுப்பணித்துறை அதிகாரியும், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து கண்மாய் நீருடன் கலக்கப்படும் கழிவு நீர் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகவே உள்ளது.