மதுரையில் கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு… ரூ.10 லட்சத்தை நிவாரணமாக அறிவித்தது தமிழக அரசு…!!
Author: Babu Lakshmanan16 ஏப்ரல் 2022, 11:24 காலை
மதுரை : மதுரையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பக்தர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.,5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று காலை தேரோட்டமும் நடந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 14ம் தேதி தங்கக் குதிரையில் கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு ஆண்டுகளுக்கு பிறகு, இன்று காலையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் கண்கொள்ளாக் காட்சியை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நின்று பார்த்து பக்தி பரவசமடைந்தனர்.கடலென குவிந்த பக்தர்களுக்கு மத்தியில் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வந்த கள்ளழகர், பச்சைப் பட்டு உடுத்தி அதிகாலை 6.30 மணியளவில் வைகையில் எழுந்தருளினார்.
அழகர் ஆற்றில் இறங்கும் தல்லாகுளம் ஆழ்வார்புரம் பகுதி வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 40 வயது மதிக்கத்தக்க ஆண், 60 வயது மதிக்கத்தக்க பெண் மூச்சு திணறி இறந்தனர். 11 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் தேனியைச் சேர்ந்த செல்வம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், மதுரை ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். காயமடைந்த 11 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0