அடுத்த மாதம் சித்திரை திருவிழா… கள்ளழகர் இறங்கும் இடத்தில் வழிந்து ஓடும் கழிவுநீர் ; தீர்வு கிடைக்குமா..? பக்தர்கள் எதிர்பார்ப்பு!!

Author: Babu Lakshmanan
21 March 2023, 6:49 pm

சித்திரை திருவிழாவிற்கு முன்பு கள்ளழகர் இறங்கும் இடத்தில் வழிந்து ஓடும் கழிவுநீருக்கு தீர்வு கிடைக்குமா? என்று பக்தர்களின் ஏக்கமாக உருவாகியுள்ளது.

மதுரை வைகை ஆற்றில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரத்தில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நேரத்தில் மட்டுமே இப்பகுதியில் கழிவு நீர் வருவது தடுத்து நிறுத்தப்படும். திருவிழா முடிந்த பிறகு மீண்டும் கழிவு நீர் அழகர் இறங்கிய அதே இடத்தில் திருப்பி விடப்படும்.

இந்த ஆண்டாவது நிரந்தரமாக கழிவு நீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்குமா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

குறிப்பாக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் அந்த சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் ஒன்று கூடி இருப்பார்கள். குறிப்பிட்ட அந்த இடத்தில் மதுரையின் பிரதான கழிவு நீர் கால்வாய் வழியே அங்கே கழிவு நீர் திறந்து விடப்படுவதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே, நிரந்தரமாக வைகை ஆற்றின் புனிதத்தை போற்றும் வகையில், வைகை ஆற்றில் கழிவுநீர் கழிப்பதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்கும் பொழுது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!