போலீசார் தாக்கியதாக கூறி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு : தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் காவல்துறை !!
Author: kavin kumar25 January 2022, 7:48 pm
மதுரை : மதுரையில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக கூறி தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மதுரை பீ.பி. குளம், பி.டி. ராஜன் சாலை பகுதியில் வசித்துவரும் மலைராஜன் – தங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஈஸ்வரன் (30). இவர் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது தல்லாகுளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கு காவலர்கள் ஈஸ்வரனிடம் மது வைத்திருப்பதாக விசாரணை நடத்தி அடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஈஸ்வரன் காவலர்களிடமிருந் து தப்பி ஓடியுள்ளார்.இதனையடுத்து, ஈஸ்வரன் அமர்ந்திருந்த பகுதியில் நான்கு மதுபாட்டில்களைக் கைப்பற்றியதாகவும், மேலும் கூடுதலாக மதுபாட்டில்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஈஸ்வரனின் வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
ஈஸ்வரனின் தாயார் தங்கம்மாள் செல்போனை பறித்துக்கொண்டதுடன், அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியையும் காவல் துறையினர் எடுத்துச் சென்றுவிட்டனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள அம்பேத்கரின் சிலை முன்பாக ஈஸ்வரன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் 70 சதவித தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் தீக்காயங்களுடன் வீடியோவொன்றையும் வெளியிட்டார் ஈஸ்வரன். அதில், தன்னை காவல்துறையினர் அடிக்கடி அடித்ததோடு பணம் கேட்டாதாகவும் பொய் வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டியதாகவும் கூறியிருந்தார். அப்படியான சூழலில், இன்று ஈஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உயிரிழந்த ஈஸ்வரனின் தாயார் பேசுகையில், “காவல்துறையினர் தாக்கியதாலும், மிரட்டியதாலும் மகன் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தார். ஈஸ்வரனின் நிலைக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.