முதியவரை துரத்தி சுவற்றை உடைத்து கோவை மக்களை மிரட்டும் மக்னா யானை : ஆக்ரோஷமாக ஓடி வரும் காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2023, 1:44 pm
தர்மபுரியில் பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை வனத்தில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது மதுக்கரை போடிபாளையம் பகுதியில் நடமாடி வருகிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
தொடர்ந்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.
இந்நிலையில் இந்த மக்னா யானையை பிடிக்க கோரி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி அந்த மக்னா யானை கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு,
6 ம் தேதி கோவை பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. பின்னர் கிராம பகுதிக்குள் நுழைந்த அந்த யானை ஒரு இடத்தில் நிற்காமல், தொடர்ந்து நடந்து இடம் மாறிக் கொண்டு வந்தது.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு சாலையை கடந்த யானை, மதுக்கரை வனப்பகுதியை நோக்கி நேற்று முதல் நகர்ந்து இன்று மதுக்கரை வந்தது.
தென்னை தோப்பு, ஓடை மற்றும் விளை நிலங்கள் வழியாக சென்ற மக்னா யானை தற்போது கோவை மதுக்கரை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது.
மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள தடுப்பு சுவர்களை உடைத்து நாசப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். தொடர்ந்து மக்னா யானையை மயக்கி ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.