வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது இளைஞர் பரிதாப பலி : மகாசிவராத்திரி வழிபாட்டிற்காக சென்ற போது சோகம்..!!
Author: Babu Lakshmanan2 மார்ச் 2022, 9:35 காலை
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டதில் 24வது இளைஞர் பரிதாபமாக பலியானார்.
கோவை மாவட்டம், பூண்டியை ஒட்டியுள்ள வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்பு வடிவில் சிவலிங்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்குச் சென்று சுயம்பு வடிவ சிவலிங்கத்தை வணங்குவது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றத்தைத் தொடங்கினர். இந்த மலையேற்றத்திற்குத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் (24) என்பவர் தனது நண்பர்களுடன் வந்திருந்தார்.
மலையேற்றத்தைத் தொடங்கிய அவர் மூன்றாவது மலையில் நடந்து சென்ற போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நண்பர்கள் சுதாரிப்பதற்குள் அவர் மயங்கி கீழே விழுந்து பலியானார்.
இதனைத் தொடர்ந்து பழனிவேலின் உடலை அவரது நண்பர்கள் பூண்டிக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பினர். வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது பக்தர் ஒருவர் பலியான சம்பவம் சக பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0