பணிப்பெண் துன்புறுத்திய விவகாரம்.. திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் மனுவில் திருப்பம் ; காவல்துறைக்கு நீதிபதி செக்!!
Author: Udayachandran RadhaKrishnan28 February 2024, 10:01 pm
பணிப்பெண் துன்புறுத்திய விவகாரம்.. திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் மனுவில் திருப்பம் ; காவல்துறைக்கு நீதிபதி செக்!!
பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதன்படி ஆன்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய 12-ம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவரை, குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில், வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர்.
திருவான்மியூர், 7-வது அவென்யூவில் வசித்து வந்த ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினாவும் அந்த இளம்பெண்ணை அதிகளவில் கொடுமைப்படுத்தியதாகவும், அவரது கை, கன்னம், முதுகு உட்பட பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
வேலை பிடிக்கவில்லை ஊருக்குப் போகிறேன் என கிளம்பிய அந்தப் பெண்ணை அனுப்ப மறுத்து கட்டாயப்படுத்தி தங்க வைத்துள்ளனர். மேலும், பேசியபடி சம்பளத்தை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆன்டோ மதிவாணன் மற்றும் மெர்லினாவை அண்மையில் கைது செய்தனர்.
இந்த நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை எனத் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிபெண்ணை தங்கள் வீட்டு பெண் போல மனுதாரர்கள் நடத்தியுள்ளதாகவும், எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
பின்னர் பணிப்பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொடூரமான அநீதி பணிப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு குறித்து காவல்துறை விசாரிக்கவே இல்லை என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, காவல்துறை தரப்பு பதில் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை அவகாசம் கோரியதால், அதிருப்தி தெரிவித்த நீதிபதி, தனி மனித உரிமை சார்ந்த வழக்குகளில் காவல்துறை மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வது ஏன் என கேள்வி எழுப்பி, 2 தினங்களுக்கு பதிலளிக்க கெடு விதித்து உத்தரவிட்டார்.