‘நான்சென்ஸ்’-ஐ நம்பியவரிடம் 2.75 கோடி மோசடி… மலையாள பட தயாரிப்பாளர் கைது ; போலீசார் அதிரடி நடவடிக்கை
Author: Babu Lakshmanan16 மே 2024, 8:10 மணி
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஜானி தாமஸ் (65). மலையாள சினிமா பட தயாரிப்பாளர். இவர் மீது கோவை வடவள்ளி குருசாமி நகரை சேர்ந்தவர் துவாரக் உதய சங்கர் என்பவர் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதில் அவர் கூறும்போது:- நான் தற்போது கனடாவில் வசித்து வருகிறேன். கடந்த 2016ம் ஆண்டு, நான் கத்தாரில் பணியாற்றிய போது, மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஜானி தாமஸ் எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது அவர் 2 மலையாள சினிமா படங்களை தயாரிக்கப்போவதாக தெரிவித்தார். அந்த படங்களுக்கு முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும், ஜானி தாமஸ் மற்றும் மகன் அவரது மகன் ரான் ஜானி ஆகியோர் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நான் படத்தில் முதலீடு செய்ய விரும்பி ரூ.75 லட்சம் கொடுத்தேன். அதன்படி, அவர்கள் ‘நான்சென்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினர். தொடர்ந்து, படத்தை முடிக்க மேலும் ரூ.2 கோடி கேட்டனர். நானும் ரூ.2 கோடியை கொடுத்தேன். அதன் பிறகு 2018ம் ஆண்டு எனது பணத்தை திரும்ப கேட்ட போது படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து, ஜானி தாமஸ் எனக்கு ரூ.50 லட்சத்தை மட்டும் லாப தொகையாக கொடுத்தார்.
மேலும் படிக்க: சாயப்பட்டறை கழிவுகளால் நுரை பொங்கும் நொய்யல்… சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டை மீட்டெடுக்கக் கோரிக்கை..!!..!!!
அதன் பின்னர் நான் கொடுத்த ரூ.2.75 கோடியை தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த பணத்தை நான் வடவள்ளியில் இருந்த போது பரிவர்த்தனை செய்ததால் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்து உள்ளேன். ஜானி தாமஸ், அவருடைய மகன் ரான் ஜானி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும், இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில், கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசார் ஜானி தாமஸ், அவருடைய மகன் ரான் ஜானி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். இந்த நிலையில், ஜானி தாமஸ் நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்பி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதை அறிந்த கொச்சி போலீசார் ஜானி தாமசை நெடும்பாசேரி விமான நிலையத்தில் பிடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று ஜானி தாமசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
0
0