பீர் பாட்டிலால் தாக்கி வழிப்பறி செய்த கும்பல்.. ரத்த காயங்களுடன் 2 கி.மீ. நடந்தே சென்று சிகிச்சை பெற்ற டீக்கடைக்காரர்…!!

Author: Babu Lakshmanan
30 June 2022, 4:13 pm

காஞ்சிபுரம் அருகே வழிப்பறி கும்பல் தாக்கியதில் காயமடைந்தவர், ஒரு மணிநேரத்திற்கு பிறகு 2 கி.மீ. நடந்தே சென்று தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று விட்டு, 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அவளூர் கூட்டுச்சாலையில் பாலமுருகன் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே டீ கடை மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் பாலமுருகன் மதுபானம் வாங்கி ஒதுக்குப்புறமாக அமர்ந்து மதுபானம் அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது ஒரே பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் பாலமுருகனிடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை எனக் கூறவே ஏடிஎம் கார்டை கேட்டுள்ளனர். ஏடிஎம் கார்டு கொண்டு வரவில்லை என கூறியதை கேட்டு ஆவேசமடைந்த அந்த மர்ம நபர்கள், பாலமுருகனை திடீரென கத்தியால் தாக்கினர். மேலும் அங்கிருந்த பீர் பாட்டிலால் அடித்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பாலமுருகனிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் பைக்கில் ஏறி தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பாலமுருகன் சுமார் ஒரு மணி நேரம் கழித்து எழுந்து அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்க்கு சென்று போன் பேசணும்னு கேட்டுள்ளார். அவர்கள் போன் கொடுக்க முடியாது என கூறி விரட்டி விட்டனர்.

உடல் முழுவதும் ரத்த காயத்துடன் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பேருந்து நிலையம் அருகே உள்ள ஏபிஜே என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளார். அவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்து 108 வாகனத்தின் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழிப்பறி கொள்ளை தொடர்பாக வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழிப்பறிக் கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் பைக்கை பறித்து சென்ற நபர்கள், அவளூர் கூட்டு சாலையில் வந்த லாரியை மடக்கி ஓட்டுநரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டதாக தப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!