சாலையோரம் மது அருந்தியவர் அடித்துக்கொலை… ஓடஓட தாக்கி கொலை செய்த கும்பல் தப்பியோட்டம் ; போலீசார் விசாரணை!!
Author: Babu Lakshmanan22 April 2023, 2:04 pm
காஞ்சிபுரம் நகரில் ரம்ஜான் நோன்பு முடிந்து மகிழ்ச்சியுடன் மது அருந்தி கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுடைய நபர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பாவாபேட்டை தெருவை சேர்ந்தவர் அயுப்கான் (48). இவருடைய மனைவி ராபியாபி. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள், மகனுடன் என இரு பிள்ளைகள் உள்ளனர். ரங்கசாமிகுளம் அம்மா உணவகம் அருகேயுள்ள வேன் தொழிற்சங்கத்தில் ஆக்டிங் டிரைவராக அயுப்கான் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று வெளியூர் சவாரி சென்று வந்த கூலி என 3000 ரூபாய் மற்றும் வேன் உரிமையாளரிடம் வாங்கிய பணம் 10,000 ரூபாய் என மொத்தம் 13 ஆயிரம் பணம் வாங்கி வைத்திருந்தாகக் கூறப்படுகிறது.
வழக்கம் போல் சவாரி முடித்துவிட்டு நள்ளிரவு மது அருந்துவதற்காக தனது தொழிற்சங்கத்தின் அருகேயுள்ள அம்மா உணவகத்தின் வாசலில் தனது வாகனத்தினை நிறுத்திவிட்டு அதன் அருகே அமர்ந்து மது அருந்தி வந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அயுப்கானை கற்களால் தாக்கியுள்ளனர்.
அதனால், அச்சமடைந்த அயுப்கான் அங்கிருந்து தப்பி ஓடினார். ரங்கசாமிகுளம் வளைவு சந்திப்பின் அருகே ஓடிய நிலையிலும், துரத்தி சென்ற மர்ம நபர்கள் மீண்டும் அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு, அவரிடமிருந்த பணத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றிருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையெடுத்து, அப்பகுதியில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றிய காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மர்ம நபர்கள் யார், பணத்திற்காக அயுப்கானை கொலை செய்தனரா…? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற ரீதியிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை பிடித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரிய செல்வந்தர்கள் மற்றும் வணிக ஸ்தலங்கள் அதிகம் உள்ள ரங்கசாமி குளம் பகுதியில், ரம்ஜான் நோன்பு முடிந்து மகிழ்ச்சியுடன் மது அருந்தி கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுடைய நபரை மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் காஞ்சிபுரம் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.