சமூகவலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம்.. ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர்.. மடக்கி பிடித்த போலீசார்!!
Author: Babu Lakshmanan27 May 2022, 4:14 pm
தருமபுரி அருகே சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி அருகே உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (19) என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அடிக்கடி சமூக வலைதளத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு பழகி வந்துள்ளார்.
கடந்த மாதம் சிறுமியை ஆசை வார்த்தை கூறி நவீன்குமார் தருமபுரிக்கு வந்து கடத்திச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வீட்டை விட்டு பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர்கள் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, தருமபுரியை சேர்ந்த சிறுமிக்கும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் நவீன்குமார் என்பவரும் அடிக்கடி சமூகவலைதளத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து, செல்போன் நம்பரை வைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். அப்பொழுது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து தஞ்சாவூர் பகுதியில் நவீன்குமார் தங்கியிருந்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. பின்னர், நவீன்குமாரையும், சிறுமியையும் காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் சிறுமியை கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து, பாலியல் வன்புணர்வு செய்ததாக நவீன்குமாரை தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பழகி சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி குழந்தைத் திருமணம் செய்து கொண்டு சம்பவம் தருமபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.