மரத்தை வெட்டியதால் எழுந்த வாக்குவாதம்.. தட்டிக்கேட்ட விவசாயிக்கு கத்திகுத்து… தருமபுரியில் தொடரும் அசம்பாவிதம்…!!
Author: Babu Lakshmanan3 July 2023, 4:42 pm
தருமபுரி ; பாப்பிரெட்டிபட்டி அருகே ஓடையின் ஓரத்தில் இருந்த மரத்தை வெட்டிய நபரை தட்டி கேட்ட விவசாயியை கத்தி குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த இருளப்பட்டி அருகே உள்ள நாகலூர் குளங்கம் பள்ளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (47). விவசாய தொழில் செய்து வரும் இவர், தன் நிலத்தின் வரப்பின் ஓரத்தில் புங்கன் மரம் மற்றும் வேப்ப மரம் ஆகியவற்றை வைத்து வளர்த்துள்ளார்.
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் பார்த்திபன் (31), நீர் ஓடையின் ஓரத்தில் இருந்த வேப்பமரம் மற்றும் புங்கன் மரங்களை இரவு நேரங்களில் வெட்டி, அதனை ஓடையின் ஓரத்தில் உள்ள தோட்டங்களில் பார்த்திபன் வீசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது
நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த ஏழுமலை (42) என்பவரின் தோட்டத்தின் அருகில் உள்ள வேப்பம் மரம் மற்றும் புங்கன் மரங்களை பார்த்திபன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி உள்ளார். அப்போது, அதனை பார்த்த ஏழுமலையின் மனைவி நித்யா (31), தனது கணவர் இல்லாத நேரத்தில் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டு விட்டு, தனது கணவர் ஏழுமலை மற்றும் அப்பகுதியில் உள்ள சிவக்குமார் ஆகியோருக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு வந்த சிவக்குமார் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் ஏன் இப்படி மரத்தை வெட்டி அருகில் உள்ள வயலில் வீசுகிறீர்கள்..? என்று கேட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது, வாக்குவாதம் முற்றிப்போக, மரம் வெட்டி பயன்படுத்திய சூரிகத்தியை கொண்டு, சிவகுமாரின் இடது தோள்பட்டை மேல் குத்தியும் மற்றும் இடது பக்க அல்லையில் சூரியால் குத்தியும் காயப்படுத்தி உள்ளார். இதனையடுத்து, சிவக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். சிவக்குமாரை தாக்கிய பார்த்திபனை சிவகுமார் உறவினர்கள் அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் தற்போது அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோல் மரத்தை வெட்டிய பார்த்திபனை தட்டி கேட்ட ஏழுமலையை, பார்த்திபன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.