காணாமல் போன பாரம்பரியம்… காணும் பொங்கலை காணச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றம்… களையிழந்த மணல்மேடு திருவிழா ..!

Author: Babu Lakshmanan
17 January 2024, 2:43 pm

விருதுநகர் மாவடம் சாத்தூரில் மணல்மேடு திருவிழாவுக்கு போதிய ஏற்பாடுகள் செய்யாததால், காணும் பொங்கலை காணச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் காணும் பொங்கல் அன்று ஆண்டுதோறும் மணல்மேடு திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். வைப்பாற்றில் நடைபெறும் காணும் பொங்கலை முன்னிட்டு சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்திருந்து, வைப்பாற்று மணல் படுகையில் ஓடி ஆடி விளையாடி உணவு அருந்தி குடும்பத்துடன் குதூகலமாக மகிழ்ந்திருப்பர்.

பண்டைய காலங்களில் இந்த மணல்மேடு திருவிழாவில் பெண்பார்க்கும் படலமும் நடைபெற்று வந்ததாக முன்னோர்கள் கூறுவர். இந்த காணும் பொங்கல் மணல்மேடு திருவிழாவிற்காக சாத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியூர்களில் இருந்தால் கூட, இங்கு வந்திருந்து திருவிழாவில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது காலம் காலமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், பல வருடங்களாக ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டு கடந்து சில தினங்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையின் காரணமாக வைப்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், தற்போது வைப்பாற்றில் தண்ணீர் ஓடிய வண்ணம் உள்ளது.

எனவே, காணும் பொங்கல் நடத்த முடியாத சூழல் நிலவி வந்த நிலையில், இன்று பெயர் அளவில் சின்ன மாரியம்மன கோவில் அருகில் வைப்பாற்றங் கரையில் சிறு மணல் திட்டில் காவல்துறை சார்பில் மணல்மேடு திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள் உற்சாகத்துடன் தங்கள் குடும்பத்துடன் வந்து வைப்பாற்றில் பொழுது போக்க வந்திருந்த நிலையில் முறையான ஏற்பாடுகள் இன்றி பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மாலை நேரம் என்பதால் வந்திருந்த பொதுமக்களை பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் புலம்பியவாறு திரும்பிச் சென்ற அவலம் நடந்தேறியது.

காலங்காலமாக நடைபெற்று வந்த மணல்மேடு திருவிழாவை மகிழ்ச்சியுடன் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காண முடிந்தது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!