மொட்டை அடிக்க கட்டாயமாக ரூ.200 வசூல் ; இடும்பன் குளம் கோவிலில் பக்தர்கள் தர்ணா.. பழனியில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan17 February 2023, 11:59 am
திண்டுக்கல் : பழனி இடும்பன் குளம் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மொட்டை அடிக்கும் இடங்களில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பதாக கூறி பக்தர்கள் ஏராளமானோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பக்தர்கள் இன்று காலை மொட்டை அடிக்க வரும் பொழுது, அதிகாலை ஐந்து மணி முதல் 9 மணி வரையும் கூடுதலாக கட்டணம் கொடுத்தால் தான் மொட்டை அடிப்போம் என ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பழனி கோயிலுக்குட்பட்ட தேவஸ்தான கூட்டத்திற்கு சென்று அனைவரும் மொட்டை அடித்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நிர்வாக சார்பில் மொட்டை அடிக்கும் இடங்களில் இலவசம் என அறிவித்திருந்த நிலையில், இடுமன்குளம் நிர்வாகத்தில் மட்டும் மொட்டை அடிப்பதற்கு இலவசம் என பதாகைகள் வைக்கப்படாமல் இருப்பதும், மொட்டை அடிக்க ரூ.100 முதல் ரூ.200 வரை கட்டாயமாக வசூலிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இடும்பன் குளம் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மொட்டை அடிக்கும் இடங்களில் 27 பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஊழியர்கள் மது போதையிலும், போதை வஸ்துகளை பயன்படுத்தியும், மொட்டை அடிப்பதால் சுமார் 15 நாட்கள் முதல் விரதம் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக வரும் தங்களுக்கு இது போன்ற சம்பவங்களால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும், கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.