அரசு கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2023, 8:48 pm
கடன் தொல்லை காரணமாக அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகூர்கனி (வயது 40). இவர் திருப்பூர் காலேஜ் ரோடு பாறைகுழி பகுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இவர் அக்கம் பக்கத்தில் செலவுக்காக கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் கடனை உரிய நேரத்தில் யாருக்கும் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை தரும்படி தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நாகூர்கனி நேற்று இரவு திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்திலும் அவர் வேலை பார்த்த மருத்துவமனையிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கும் அவரை காணவில்லை.
இந்த நிலையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது அவர் ஆம்புலன்ஸ் டிரைவர் நாகூர்கனி என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.