நான் காப்பாத்த நினைக்கல.. கோர்ட் வெளியே மன்சூர் அலிகான் பரபரப்பு பேச்சு!
Author: Hariharasudhan5 December 2024, 1:49 pm
என் மகன் என்பதால் நான் அவனைக் காப்பாற்ற நினைக்கவில்லை என நடிகர் மன்சூர் அலிகான், தனது மகனின் கைதுக்குப் பிறகு கூறியுள்ளார்.
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா உள்பட உயர் ரக கஞ்சா சப்ளை விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர், அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 7 பேரையும் கைது செய்து, அவர்கள் அனைவரையும் ஜெஜெ நகர் காவல்துறையினர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பரம்வீர், 7 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக கைது செய்யப்பட்ட 3 பேர் நீதிமன்றக் காவலில் விசாரணையில் உள்ள நிலையில், அவர்களும் சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். இந்த நிலையில், 7 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பல்லாவரத்தில் உள்ள குடிநீரை அமைச்சர் குடிப்பாரா? என்ன திமிர் பேச்சு? அண்ணாமலை கண்டனம்!
அப்போது, அம்பத்தூர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் மன்சூர் அலிகான், மகனை சிறைக்கு அனுப்பிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “முதலில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது, எப்படி கிடைக்கிறது, இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடியே தீரவேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் என்னுடைய மகனின் செல்போன் நம்பர் இருந்திருக்கிறது.
உடனே அதை வைத்து கைது செய்துவிட்டார்கள். அவன் அடிக்கிற மாதிரி பார்த்தார்களா? போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே, நான் சரக்கு என்ற ஒரு படம் எடுத்தேன். அந்த படத்தை வெளியிட சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. ஓடிடியில் கூட அந்த படத்தை வெளியிட விடாமல் எந்த சக்தி தடுக்கிறது? நேரம் வரும்போது நான் பொங்குவேன்” எனக் கூறினார்.