கஞ்சா வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது… தொடரும் கிடுக்குப்பிடி விசாரணை!
Author: Hariharasudhan4 December 2024, 10:26 am
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்த வழக்கு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பரில் 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், இவர்கள் அளித்த தகவலின்படி, சென்னை மண்ணடியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிவ ந்து, காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த விற்பனையில், கஞ்சா மட்டுமின்றி, அதிக விலை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டதை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கைதானவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சேலத்தில் புதரில் நிர்வாணமாக இளம்பெண் சடலம் மீட்பு.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!
இதனிடையே, காட்டாங்குளத்தூர் பகுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த நவம்பர் 30ஆம் தேதி காட்டாங்குளத்தூருக்குச் சென்ற தனிப்படை போலீசார், அங்கு அறையில் பதுங்கி இருந்த 2 கல்லூரி மாணவர்களைக் கைது செய்தனர்.
இதனையடுத்து, இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கேரளாவைச் சேர்ந்த அவர்களது அறையில் கஞ்சா ஆயில் உள்பட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இடத்தில், இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்தபோது, பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (26) செல்போன் எண்ணும் இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலிகான் துக்ளக் இருந்த வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி, பின்னர் விசாரணையின் அடிப்படையில் அவரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உபடுத்தப்பட்டு உள்ளார். மேலும் 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் கூறி உள்ளனர்.