திருத்தணிக்கே மொட்டை போட்ட பலே கில்லாடிகள்.. சதுரங்க வேட்டை பாணியில் நூதன மோசடி!

Author: Hariharasudhan
18 அக்டோபர் 2024, 5:13 மணி
Quick Share

திருத்தணியில் சதுரங்க வேட்டை பட பாணியில் நூதனமாக மோசடியில் ஈடுபட்டதாக சிலரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்: திருத்தணியைச் சேர்ந்த மாணவி ஒருவர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “நான் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த ஜூன் 17ஆம் தேதி என்னுடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு வேலை வாய்ப்பு நோட்டீஸ் என ஒரு எண்ணில் இருந்து மெசேஜ் வந்தது. இதனையடுத்து மெசேஜ் வந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு நான் பேசினேன். அப்போது எதிரில் பேசியவர் தன்னை நந்தினி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் அவர் என்னை அலுவலகம் வரச் சொன்னார். அதன்படி நானும் அங்கு சென்றேன். அப்போது, இங்கு பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறினார். அது மட்டுமின்றி, வேலை வேண்டும் என்றால் தங்களின் கம்பெனியில் உறுப்பினராக சேரும்படியும், அதற்காக 10 ஆயிரத்து 800 ரூபாய் செலுத்தும்படியும் கூறினார். இதையடுத்து நானும் என்னுடைய பெற்றோரிடம் பணத்தை வாங்கி, கடந்த ஜூலை 31 அன்று கொடுத்தேன். இதையடுத்து பணம் செலுத்தியதற்கான ரசீதுடன், 9 நிபந்தனைகளையும் கூறி, ஒரு பேப்பரில் என்னிடம் கையெழுத்து வாங்கினர்.

அடுத்ததாக 13 பொருள்களை என்னிடம் கொடுத்த நந்தினி, அதை என்னை பயன்படுத்திக் கொள்ளும்படி கூறினார். பின்னர், 12 இலக்க ஐடி எண் ஒன்றையும், 6 இலக்க பாஸ்வேர்டையும் என்னிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து எனக்கு கீழ் கட்டாயம் இரண்டு பேரை பணம் செலுத்தி கம்பெனியின் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு சேர்த்து விட்டால் வருமானம் வரும் என்றும் கூறினார்.

இதையடுத்து செலுத்திய பணத்தை திரும்பப் பெறும் கட்டாயத்தில் இதுவரை 10 பேரை நான் சேர்த்துவிட்டேன். நான் சேர்த்து விட்டவர்களிடமும் தலா 10 ஆயிரத்து 800 ரூபாயை நந்தினியும் கம்பெனியின் மேலாளர் ரகுவும் வாங்கினர். தற்போது எனக்கு கீழாக 65 பேர் உள்ளனர். அதில் சிலருக்கு பொருட்களும் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவை கொடுக்கவில்லை. இதுகுறித்து கம்பெனியில் நான் கேட்டபோது, சிலர் என் வீட்டுக்கு வந்து பிரச்னை செய்தனர்.

இதனிடையே, கம்பெனியில் இருந்து கொடுத்த ஆம்லா ஜூஸ் குடித்த சிலருக்கு வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டது. என்னுடைய வங்கிக் கணக்கில் இதுவரை வருமானமாக 15 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. என்னுடைய குழுவினருக்காக மேலாளர் ரகு, நந்தினியிடம் பேசியதால் என்னை மிரட்டியதோடு, எனக்கு வர வேண்டிய வருமானத்தையும் இருவரும் தடுத்தனர். மேலும் எனக்கு தெரியாமலேயே என்னுடைய வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகியவை எனக்கு வழங்கப்பட்ட ஐடியிலிருந்து நீக்கப்பட்டது. இதே போன்று எனக்கு மேல் உள்ள லீடர் திலகவதியின் வங்கி அக்கவுண்ட் நம்பர், ஆதார் எண்ணும் நீக்கப்பட்டது. எனவே எனக்கும் மற்றும் என்னைப் போன்றவர்கள் செலுத்திய பணத்தை வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ’அப்பா’ பட பாணியில் நெல்லையில் சம்பவம்.. போலீசார் விசாரணையில் பகீர் தகவல்

இதன்படி, அந்த நிறுவனத்தின் மேலாளர் ரகு, அவரது மனைவி சத்யா, அசைன்மென்ட் மேலாளர் நந்தினி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, “ரூ.10,800-ஐ டெபாசிட் தொகையாக செலுத்தி, எங்கள் கம்பெனியில் உறுப்பினராக வேண்டும். நீங்கள் செலுத்தும் பணத்துக்காக உங்களுக்கு சத்துமாவு, பற்பசை, தலைக்கு தேய்க்கும் ஆயில், தேன், ஆம்லா ஜூஸ் ஆகியவற்றை நாங்கள் வழங்குவோம். பின்னர் டெபாசிட் செய்பவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களை எங்கள் கம்பெனியில் உறுப்பினராக சேர்த்துவிட்டால், அதற்கேற்ப உங்களுக்கு கமிஷன் கொடுக்கப்படுவதோடு டீம் லீடராகவும் முன்னேற்றப்படுவீர்கள். இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்” என விளம்பரம் ஒன்று திருத்தணி பகுதியில் வெளியாகியுள்ளது.

  • Governor திராவிடத்தை தவறவிட்ட ஆளுநர் மேடை.. கொந்தளித்த தமிழ்நாடு.. மன்னிப்பு கோரிய டிடி தமிழ்!
  • Views: - 91

    0

    0

    மறுமொழி இடவும்