12 – 14 வயது சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி வைத்த மேயர் : 28 நாட்களில் 2வது தவணை போட வேண்டும் என அறிவுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2022, 4:49 pm

கோவை : கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் செட்டிவீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று துவங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80க்கு உட்பட்ட, டவுன்ஹால் செட்டிவீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று துவங்கி வைத்தார்

இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே பேசிய அவர் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வதற்கு தடுப்பூசி மிகவும் அவசியமானதாகும். கோவை மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசிகள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியன அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை, கோவை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 99.4 சதவீதம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 88.1 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 15- 18 வயதிற்குட்பட்ட 1,31,066 சிறுவர்களுக்கு முதல் தவணை மற்றும் 1,02,683 சிறுவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை தவணையாக மருத்துவப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றம் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இரண்டாம் தவணை செலுத்தி 9 மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 46,898 நபர்கள் பயனடைந்துள்ளனர். வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 24 முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில் 17.84 இலட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.

தற்போது 12வயது முதல், 14 வயதில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பிரத்தியேகமாக கோர்பிவேக்ஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1,02,200, 12முதல் -14 வரையில் உள்ள சிறார்கள் பயனடைய உள்ளார்கள், இந்த தடுப்பூசி இன்று முதல வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் இரண்டாம் தவணை 28 நாட்கள் கழித்து வழங்கப்படவேண்டும். இதற்காக 1,04,100 டோஸ் தடுப்பூசிகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!