அப்போ மருந்து வியாபாரி…இப்போ போதை மாத்திரை டீலர்: பொறிவைத்து பிடித்த கோவை போலீஸ்..!!
Author: Rajesh12 April 2022, 11:52 am
கோவை: கோவையில் மருந்து கடை நடத்துவது போல் நடித்து இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் பொறிவைத்து பிடித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கணபதி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் தனசேகர் (28). மருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்பவர்களுடனும், அதனை வாங்கும் இளைஞர்களுடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
முதலில் தான் பணி புரியும் மருந்து கடையில் இருந்தவாறே யாருக்கும் தெரியாமல் மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த வியாபாரத்தில் பணம் அதிகம் கிடைப்பதை தெரிந்து கொண்ட தனசேகர், முழு நேரமும் போதை மாத்திரை விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்தார்.
இதை தொடர்ந்து கோவை கணபதியை அடுத்து கிருஷ்ணராயபுரம் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சொந்தமாக மருந்துக்கடை ஒன்றை வைத்தார்.
அப்போது முதல் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மாஃபியாவாக செயல்பட்டுள்ளார். மருந்துக்கடை நடத்தும் அதே நேரத்தில் எங்கு யாருக்கு போதை மாத்திரை தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மாத்திரைகளை சப்ளை செய்து வந்தார்.
கல்லூரி மாணவர்கள் பலரும் அவரது மருந்துக்கடைக்கு வந்து ரகசியமாக போதை மாத்திரைகளை வாங்கிச் சென்றுள்ளனர். இதனிடையே, ரத்தினபுரி போலீசார் நேற்று ரத்தினபுரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக ரெய்டு நடத்தினர்.
அப்போது பிடிபட்ட இரண்டு பேரை விசாரித்த போது அவர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
போதை மாத்திரைகளை சப்ளை செய்வது யார் என்று விசாரித்த போது தனசேகர் தான் மாத்திரைகளை சப்ளை செய்கிறார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தனசேகரை நோட்டமிட்டனர். பின்னர், காந்திபுரம் பகுதியில் போலீசார் சாதாரண உடையில் பின் தொடர்ந்து சென்றனர்.
அப்போது ஆமினி பஸ்டாண்ட் அருகே தனசேகர் மாத்திரையை சப்ளை செய்ய போது அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது, அறுவை சிகிச்சைக்கு பின் வலி தெரியாமல் இருப்பதற்கும், நீண்ட நேர உறக்கத்திற்கும் தேவையான டைசிலேமைன், ட்ரெம்ட்டால், அசிட்டோ மெனோஃபென், பியோன் ஸ்பேஷ் பிளஸ் உள்ளிட்ட போதை மாத்திரிகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து 35 பெட்டிகளில் இருந்து 8 ஆயிரத்து 400 போதை மாத்திரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து தனசேகரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கோவையில் கஞ்சா கலாச்சாரம் அதிகரித்து வருவதை போல் போதை மாத்திரை பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறையுடன் இணைந்து போலீசார் போதை மாத்திரைகள் தொடர்பான ரெய்டுகளை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.