வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாகுபலி யானை… வனத்துறையினர் போட்ட பிளான்… வந்திறங்கிய வசீம் மற்றும் விஜய்..!!
Author: Babu Lakshmanan24 June 2023, 10:28 am
மேட்டுப்பாளையத்தில் வாயில் காயமடைந்த பாகுபலி காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிக்க வசீம், விஜய் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் பாகுபலி காட்டு யானைக்கு சிகிக்சையளிக்க யானையின் இருப்பிடத்தை பைரவன், வளவன் என்ற இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பாகுபலி யானையை கண்டவுடன் அதற்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து பாகுபலி யானையை பிடிப்பதற்கு முதுமலை யானைகள் முகாமில் இருந்து வசீம், விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
பாகுபலி யானைக்கு வாயில் ஏற்பட்டுள்ள காயம் சிறியதாக இருந்தால் பழங்களில் மருந்து மாத்திரைகளை வைத்து கொடுத்து அதற்கு சிகிச்சை அளிப்பது என்றும், பெரிய காயமாக இருந்தால் டாப்ஸ்லிப் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று அங்கு வைத்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பாகுபலி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் தலைமையில் வனச்சரகர்கள், வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.