பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு… கரைபுரண்டோடிய தண்ணீரில் சிக்கிய இளைஞர்கள்.. திக் திக் சம்பவம்!!
Author: Babu Lakshmanan25 November 2022, 11:56 am
மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த ஏழு இளைஞர்களை தீயணைப்புத்துறையினர் பரிசல் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
கோவை பீளமேடு பகுதியை சிரஞ்சீவி, சஞ்சய், மணிகண்டன், ரவிக்குமார், சரவணன், சதீஷ்குமார், கணேஷ்குமார் என ஏழு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்படி வந்த அந்த ஏழு இளைஞர்களும் பவானி ஆற்றில் நெல்லித்துரை அருகே உள்ள குண்டுக்கல்த்துரை என்ற பகுதிக்கு சென்றுள்ளனர்.
இளைஞர்கள் குளிக்க சென்ற போது ஆற்றில் வெள்ளம் குறைவாக இருந்ததால் அனைவரும் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது திடீரென பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடபட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர்கள் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். பின்னர், ஆற்றின் மையப்பகுதியில் ஒரு மரம் இருந்ததால் அந்த மரத்தின் கிளையில் அனைவரும் ஏறி உயிர்தப்பியுள்ளனர்.
இதனையடுத்து, மாட்டி கொண்ட இளைஞர்களின் அலறல் சப்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள், இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் சிக்கிகொண்ட இளைஞர்களை கயிறு கட்டி மரத்தில் இருந்து இறக்கியதுடன், பரிசல் மூலம் ஆற்றின் மைய பகுதியில் இருந்தவர்களை கரைக்கு பத்திரமாக அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார், வெளியூர் நபர்கள் இதுமாதிரி தெரியாத இடத்தில் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.