2வது முறையாக எம்ஜிஆர் சிலை உடைப்பு.. புதுப்பித்து வைக்கப்பட்ட சிலையை உடைத்த மர்மநபர்கள் : அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 3:55 pm

உடைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை.. புதுப்பித்து வைக்கப்பட்ட சிலையை மீண்டும் உடைத்த மர்மநபர்கள் : அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரெட்டிமாங்குடி கடைவீதி பகுதியில் அதிமுக நிறுவன தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவச் சிலை கடந்த 2003 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ந்தேதி அமைக்கப்பட்டது.


இந்த சிலையை கடந்த மாதம் 22 ந்தேதி சமூகவிரோதிகள் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சிலை மீது சாணியை பூசி விட்டு சென்றனர். இச்சம்பவத்தை அறிந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் திருஉருவ சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ரெட்டி மாங்குடி கடைவீதி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சிறுகனூர் காவல் நிலையத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடைத்து சேதப்படுத்திய எம்ஜிஆர் சிலையை புதுப்பித்து மீண்டும் அதே இடத்தில் அமைத்தனர். இந்நிலையில் அந்த சிலையை சமூக விரோதிகள் சிலர் மீண்டும் எம்ஜிஆரின் திருஉருவ சிலையை உடைத்து சேதப்படுத்தினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர். இதனை அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் அதிமுகவின் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி உள்ளிட்ட போலீசார் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக விரோதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். மேலும் சிலை சுற்றி கண்காணிப்பு கேமரா வைக்கும்படி அதிமுகவிற்கு போலீசார் அறிவுறுத்தினர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…