2வது முறையாக எம்ஜிஆர் சிலை உடைத்த விவகாரம் : தேடுதல் வேட்டையில் சிக்கிய நபர்.. பகீர் வாக்குமூலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2023, 3:58 pm

2வது முறையாக எம்ஜிஆர் சிலை உடைத்த விவகாரம் : தேடுதல் வேட்டையில் சிக்கிய நபர்.. பகீர் வாக்குமூலம்!!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடி கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவ சிலையை மீண்டும் உடைத்து சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டிமாங்குடி கடைவீதி பகுதியில் அதிமுக நிறுவன தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவச் சிலை கடந்த 2003 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ந்தேதி அமைக்கப்பட்டது.

இந்த சிலையை கடந்த மாதம் 22 ந்தேதி சமூகவிரோதிகள் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சிலை மீது சாணியை பூசி விட்டு சென்றனர். இச்சம்பவத்தை அறிந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

எம்ஜிஆர் திருஉருவ சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ரெட்டி மாங்குடி கடைவீதி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் அன்றைய தினம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் எம்ஜிஆர் சிலையை உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சிறுகனூர் காவல் நிலையத்தில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடைத்து சேதப்படுத்திய எம்ஜிஆர் சிலையை புதுப்பித்து மீண்டும் அதே இடத்தில் அமைத்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் எம்ஜிஆரின் திருஉருவ சிலையை உடைத்து சேதப்படுத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர். இதனை அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் அதிமுகவின் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி உள்ளிட்ட போலீசார் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

சிலையை உடைத்த நபரை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இந்நிலையில் சிலையை உடைத்த நபர் குறித்து சிறுகனூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ரெட்டிமாங்குடி நடுத்தெருவைச் சேர்ந்த 47 வயதான செந்தில்குமார் என தெரிய வந்தது. பின்னர் அவரைப் பிடித்த சிறுகனூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!