கடலூர் அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு… குவிந்த அதிமுகவினர் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு… மர்மநபருக்கு வலைவீச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan14 October 2022, 4:50 pm
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே எம். ஜி.ஆர் சிலை உள்ளது. நேற்று இரவு எம்.ஜி.ஆர். சிலையின் இடது கையை மர்மநபர்கள் உடைத்து உள்ளனர்.
இதையறிந்த அ.தி.மு.க.வினர் அதிரச்சி அடைந்தனர். இதுபற்றி கிளை அ.தி.மு.க. செயலாளர் ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.
இதனால் அப்பகுதியில் அதிமுகவினர் குவியத் தொடங்கியதால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து ஆவினன்குடி போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன், உடைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை பார்வையிட்டு இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.