தரையில் பால் ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் : பால் விலையை உயர்த்தி கேட்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 October 2022, 6:14 pm
திருப்பூர் : உற்பத்தி செய்யும் பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்த கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக இன்று திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக மாநிலம் தழுவிய கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
தவிடு, பருத்திகொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனம் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதாலும், சோளத்தட்டை உள்ளிட்ட தீவனம் உற்பத்தி செலவுகள் அதிகரித்து விட்டதாலும், 2019-க்குப்பின் பால் கொள்முதல் விலையை தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் உயர்த்தி தராததாலும், விவசாயிகள் கறந்து கொண்டு வரும் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10/-(பத்து ரூபாய்) உயர்த்தி வழங்க கேட்டும், பால்பண பாக்கிகளை உடனடியாக வழங்க கேட்டும், கலப்பு தீவனத்திற்கு மானிய விலை வழங்க கேட்டும் இந்த போராட்டம் நடைபெற்றது.
சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கறவை மாடுகளுடன் கலந்து கொண்டனர். பின்பு முழக்கம் எழுப்பி பாலை தரையில் ஊற்றி பால் கொள்முதல் விலையை உடனே ஏற்றி தர வேண்டும் என்று தனது கோப ஆவேசத்தை தெரிவித்தனர்.