தமிழக அரசுக்கு எதிராக கொந்தளித்த பால் உற்பத்தியாளர்கள் : சாலையில் பாலைக் கொட்டி ஆர்ப்பாட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan19 March 2023, 10:49 am
தமிழக அரசின் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பசும்பால் 35 ரூபாய்க்கும், எருமைப்பால் 44 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கபட்டது.
அதனை தொடர்ந்து 3 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 7 ரூபாயையும் உயர்த்த வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாடுகளுக்கான தீவனம், பாலுக்கான உற்பத்தி செலவை ஒப்பிடும்போது தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வரும் விலை குறைவு என்பதால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியாக இன்று கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமல்லாமல் மாட்டு தீவனம் மானியம் வழங்கிட வேண்டும், ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.
அவர்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலை தரையில் கொட்டி அவர்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.