இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய மினி பேருந்து : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan10 May 2023, 10:32 am
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அடையக்கருங்குளம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மகள் ரம்யா (வயது 25). நேற்று ரம்யா, அவரது அண்ணி பிலோமீனா, அண்ணி மகள் ஹென்சி ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் அம்பையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த மினி பஸ் பைக்கை முந்தி செல்லும் போது எதிர்பாராத விதமாக பைக்கின் மீது மோதியதில் மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் ரம்யா மீது மினி பஸ்ஸின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் நடந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் அம்பையில் பெரும்பாலான மின் பஸ்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதும் இல்லை, இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதால் இதுபோன்று விபத்துக்கள் நடக்கின்றன என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.