பள்ளிப்பாடங்களில் சாதியை குறிப்பிடுவது ஏன் தெரியுமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
Author: Babu Lakshmanan14 March 2022, 3:39 pm
பள்ளிப்பாடங்களில் சாதியை குறிப்பிடுவது ஏன்..? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று வட்டார கல்வி அலுவலர்களாக நேரடி பணி நியமனம் பெற்ற 95 நபர்களுக்கு , பணி நியமன ஆணைகளை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அமைச்சர் மகேஷ் பொய்யாமோழி கூறியதாவது :- தரமான கல்வி வழங்குவது அரசின் கடமை, அதனால்தான் முதலமைச்சர் தனது அனைத்து நிகழ்வுகளிலும் கல்வி, சுகாதாரம் குறித்தே அதிகமாக பேசி வருகிறார். ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமே சீரான எதிர்காலத்தை உருவாக்க முடியும் .
திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதி குறித்து, பெற்றோரின் விருப்ப அடிப்படையிலேயே பதிவு செய்யப்படுகிறது. சான்றிதழில் சாதியை குறிப்பிட விருப்பமில்லை என்று பதிவிடுவதற்கான வசதியும் இருக்கிறது.
‘ எமிஸ் ‘ தளத்தில் மாணவர்களின் சாதி விவரம் வராத வகையில் bc ,mbc என்பது போல ‘சாதியின் பிரிவு’ மட்டுமே வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறையினர் கேட்டுள்ள குறிப்பிட்ட கேள்விகளை மாணவிகளிடம் கேட்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய உள்ளோம். மாணவிகளிடம் சில கேள்விகளை நேரடியாக இன்றி சுற்றி வளைத்து கேட்கலாம்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பதால் சாதி குறித்த விவரம் இடம்பெறுகிறது. மாணவர்கள் சலுகைகளை பெற சாதி குறித்து கேட்க வேண்டியுள்ளது. சாதியை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது .
தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் வசதி இருந்தும் சில பள்ளிகளில் தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.அந்த பள்ளிகளில் தமிழ் வழியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 100 சதவீதம் எமிஸ் தளம் பயன்பாட்டிற்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் கட்டமைப்பு குறித்து எமிஸ் தளத்தில் மூலமே அறிய முடியும்.
இருமொழிக் கல்வி , 3ம் வகுப்பு குழந்தைகளுக்கு தேர்வு வைக்கக்கூடது போன்றவற்றில் உறுதியாக உள்ளோம். பணம் கட்டாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வெளியில் நிறுத்த கூடாது என கண்டிப்புடன் கூறிக் கொள்கிறேன். 10 ஆயிரத்துகும் மேலான பழைமையான பள்ளி கட்டடங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளோம். மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அவற்றை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நபார்டு வங்கி நிதி மூலமும் , தொகுதி மேம்பாட்டு நிதிகளை பயன்படுத்தியும் கட்டடங்களை சீரமைக்க உள்ளோம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மறு தேர்வு இன்றி பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என போராடி வருவது சங்கடமாக உள்ளது. நாளை இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உள்ளிட்டோர் பேச உள்ளோம், என்று கூறினார்.