அண்ணாமலை பொய் சொல்கிறார்.. தமிழக அரசின் நிலைப்பாடு இதுதான்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
10 November 2022, 6:10 pm

திருச்சி : புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருவதாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்களோடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் அவர்களோடு செல்கிறார். சார்ஜா செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம். கடந்த டிசம்பர் மாதமே அவர்களை அழைத்து செல்ல வேண்டியது. ஆனால், ஒமிக்ரான் பரவல் காரணமாக, அவர்களை அழைத்து செல்ல முடியவில்லை. தற்போது அவர்களை அழைத்து செல்கிறோம். சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி, துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றி காட்ட உள்ளோம்.

நான்கு நாட்களும் அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் நான் இருப்பேன். தற்போது மாணவர்களை சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து அழைத்து செல்கிறோம். வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் ‘வாசிக்கலாம் வாங்க’ உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு சார்பிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம்.

புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார். ஆனால், புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைத்துள்ளார். அதை அவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கல் செய்த பின்பு, நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்.

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு காரணமாக பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே, இதை தடுப்பதற்காக தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். EWS இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதல்வராக தமிழக முதலமைச்சர் இருப்பார், என தெரிவித்தார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!