இது என் நண்பன் உதயநிதி படித்த கல்லூரி ; இங்கே பற்றும் நெருப்பு தான்… லயோலாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி..!!
Author: Babu Lakshmanan26 August 2022, 4:00 pm
நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்றும், போதையற்ற சமுதாயத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு தான் உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சென்னை லயோலா கல்லூரியின் மாணவர் மன்ற துவக்க விழா நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், என் நண்பன் உதயநிதி படித்த கல்லூரி இது, அவரின் நண்பனாக இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்ற அவர், இது எனக்கு பரிச்சயமான கல்லூரி தான், படிப்பைக் காட்டிலும் சமுதாயத்தின் மீது லயோலா கல்லூரி அதிகம் அக்கறை கட்டும் எனவும், நாட்டு மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் முதலில் குரல் எழுப்புவது லயோலா கல்லூரி என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது எனவும், இங்கே பற்றும் நெருப்பு தான் அனைத்து மாணவ சமுதாயத்திடம் பற்றிக் கொள்ளும் என்ற அவர், ஒன்றிய அரசின் புள்ளிவிபரப்படி 15 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக தெரிவிக்கிறது. அதனால் தான் முதலமைச்சர் போதைப் பொருளுக்கெதிரான நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
2030 இந்தியாவில் தான் அதிகப்படியான இளைஞர்கள் இருப்பார்கள். தற்போது இருக்கும் 40 கோடி இளைஞர்களும் நாட்டுப்பற்று மூலமோ, மொழிப்பற்று மூலமோ ஒன்றிணைய வேண்டும். உலகிலேயே இளைஞர் சக்தி அதிகம் உள்ள நாடு இந்தியா தான். நாட்டை நல்வழிப்படுத்தும் பொறுப்பு, இன்றைய மாணவர்களுக்கு உண்டு, என்றார்.
உங்களுக்கு அட்வைஸ் செய்ய விரும்பவில்லை நல்லது, கெட்டது உங்களுக்கே தெரியும், சமுதாய முன்னேற்றத்துக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும், உங்களால் முடியும் என்று நம்புகிறேன் எனவும், நாட்டுப்பற்று, மொழிப்பற்றில் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் ,என தெரிவித்தார்.
0
0