சட்டவிரோதமாக ரூ.60 கோடி சொத்து.. அமைச்சருக்கு எதிராக ஆதாரம் ; EDயின் பதிலை கேட்டு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!
Author: Babu Lakshmanan1 November 2023, 4:58 pm
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2001 – 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.
இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவ்வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்கக் கோரி அமலாக்கத்துறை, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையானது, 90 சதவீதம் முடிவடைந்துள்ளதால், இதில் அமலாக்கத் துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில், அமலாக்கத் துறையினர் கடந்த அன்று அக்டோபர் 11 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களை ஒரு தரப்பாக இணைக்க நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். தங்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சுமார் 60 கோடிக்கு மேல் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை என அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் வாதம் செய்தார். அப்போது, நீதிபதி விசாரணையை வரும் நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் இருந்து அவரது தம்பி சிவானந்தம் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் திமுக சட்டத்துறை செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான என். ஆர் இளங்கோ ஆஜராகி வாதாடினார். இந்நிலையில், வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு நீதிபதி செல்வம் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
பின்னர், இது குறித்து திமுக தரப்பில் ஆஜரான சட்டத்துறை செயலாளர் என். ஆர் இளங்கோ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வழக்கு போட்டுள்ளோம். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தரப்பில் இருந்து வாதம் எடுத்து வைத்தோம்.
அந்த வாதத்தில் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றத்தில் வாதங்கள் அல்லது சாட்சியங்களை கொடுப்பதற்கும் எந்த அதிகாரமும் இல்லை என்றும், மாநில அரசு தரப்பில் புலன் விசாரணை செய்த வழக்கில் மத்திய அரசின் நிறுவனங்கள் ED மற்றும் சிபிஐ வந்து இடையூறு செய்ய முடியாது. அப்படி இடையூறு செய்யும் என்றால், வாய்ப்பு இருந்தால் ஒன்றிய அரசு இடமிருந்து ரபேல் வழக்கு சம்பந்தமாக மாநில அரசு உள்ளே வர அதிகாரமிருக்கா என்று கேட்டோம். அதற்கு மறுத்து விட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இந்த புலன்விசாரணையை செய்யக்கூடாது என்ற தடையையும் விதித்து உள்ளது.
மேலும், நிச்சயமாக அரசியல் தலையீடு இருக்கிறது. வேண்டும் என்பதற்காக அமைச்சர் என்பதற்காக அரசியல் நோக்கத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பிக்கிறார்கள். அவர்களுடைய நினைவு கனவாக தான் போகும், என்றார்.
அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் கூறுகையில், “அமலாக்கத்துறையால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட நபர் இல்லை. அதனால் சேர்க்க கூடாது என்றும், மேலும், இருந்தால் லஞ்ச ஒழிப்பு துறையிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று திமுக சார்பில் வழக்கறிஞர் வாதாடினார். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் நாங்கள் கூறும் போது, லஞ்ச ஒழிப்பு துறை மாநில கட்டுப்பாடு. அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராக உள்ளார். ஆகவே தமிழக அரசின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை கீழ் ஆதாரங்கள் கொடுக்கப்பட முடியாது. மேலும், 2001- 2006 வரையுள்ள வழக்கில் 2023 வரை வழக்கு நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 60 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆதாரம் இருக்கிறது,” என்றார்.