‘தாஜ்மஹால் கட்டியதை விட அதிக நாள் ஆயிடுச்சு’… நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் ஆய்வு… அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் நக்கல்…!!
Author: Babu Lakshmanan8 May 2023, 4:55 pm
தூத்துக்குடி ; தூத்துக்குடி மாவட்டம் எம்.எல் தேரி,பொன்னக்குடி பகுதியில் நடந்து வரும் 3ஆம் கட்ட நதிநீர் இணைப்புத் திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதியில் இருந்து வெள்ள காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை வறட்சி பகுதிகளான நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் ,எம்.எல்.தேரி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் உடன்குடி வரை 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில், தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு ஆகியவற்றை இணைத்து 2009-ம் ஆண்டு 369 கோடி ரூபாய் மதிப்பில் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி நதிநீர் இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பணிகள் கடந்த பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்த நிலையில், தற்போது 800 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மூன்றாம் கட்ட திட்டப்பணிகள் நடந்து வரும் நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி, பரப்பாடி, தூத்துக்குடி மாவட்டம் எம்.எல் தேரி, பொன்னாக்குடி ஆகிய பகுதிகளில் நீர்வளத்துறை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, பணிகள் நிறைவடையாத பகுதிகளில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு துரைமுருகன் உத்தரவிட்டார். பரப்பாடி பகுதியில் ஆய்வின் போது அதிகாரிகளிடம் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தாஜ்மஹால் கட்டியதை விட அதிக நாள் ஆயிடுச்சு.. இது எப்போ முடியுமோ (நதிநீர் இணைப்பு பணிகள்) தெரியலையே,” என நக்கலாக அதிகாரிகளிடம் பேசினார்.
அதற்கு அருகில் இருந்த சபாநாயகர் அப்பாவு, “அய்யா முன்னால பெண்டிங் ஆயிட்டு ,நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் ஸ்டார்ட் ஆயிட்டு. ஒரு 6 வருஷம் கேப் ஆயிட்டு.. பின்னர் அருகில் இருந்த அதிகாரிகள் வருகின்றன. அக்டோபர் மாதத்தில் பணிகள் முடிவடையும்,” என கூறினர்.
பின்னர் தூத்துக்குடி மாவட்டம் எம்.எல்.தேரியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.