‘எந்த ஊருமா நீ…? கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க..’ ஆய்வின் போது பெண் மருத்துவரை அதட்டிய அமைச்சர் துரைமுருகன்…!!

Author: Babu Lakshmanan
5 October 2022, 2:27 pm

வேலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வின் போது, பெண் மருத்துவரை அமைச்சர் அதட்டி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என்றும், தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்படுவதில்லை என்ற புகார்கள் அமைச்சர்கள் முன் வைக்கப்பட்டது.

இதனால், கடுப்பான அமைச்சர்கள் அங்கு பணியில் உள்ள மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கினர். அப்போது, பணியில் கவனம் செலுத்தாத வட்டார மருத்துவ அலுவலர் ராணி நிர்மலா, மருத்துவ அலுவலர் பிரதீப் குமார் ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார்.

அந்த சமயம், அங்கு வந்த பெண் மருத்துவரிடம், ‘யாருமா நீ..? எந்த ஊருமா நீ.? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அப்போது, அந்தப் பெண் மருத்துவர், ‘பொன்னை தான் எனது ஊர்’, என்று சொல்ல, அதற்கு அமைச்சர் துரைமுருகன், ‘முதலில் இவங்க கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க’ எனக் கூறினார்.

ஏற்கனவே, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மேயர் உள்ளிட்டோருக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்து வரும் நிலையில், அரசு பெண் மருத்துவரிடம் அமைச்சர் இதுபோன்று அதட்டி பேசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…