பீஞ்ச மந்தை மலை கிராமத்திற்கு விரைவில் மினி பேருந்து வசதி – அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பால் குஷி…!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 8:59 pm

அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்ச மந்தை மலை கிராமத்திற்கு விரைவில் மினி பேருந்து இயக்கப்படும் என மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே முத்துகுமரன் மலை முதல் பீஞ்சமந்தை மலை கிராமம் வரை ரூ.5.11 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில நிதி மின்சாரம் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்றனர். பீஞ்சமந்தை மலை கிராமத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பீஞ்சமந்தை, பாலாம்பட்டு மற்றும் ஜார்தான்கொல்லை ஆகிய ஊராட்சிகளை சார்ந்த 794 பயனாளிகளுக்கு ரூபாய் 10 கோடியே 3 இலட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான அரசின் நல்ல திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்சை மந்தை மலை கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலைவாழ் மக்கள் இந்த சாலை பயன்படுத்தி விரைவாக சென்று வர பயனுள்ளவையாக அமைந்துள்ளது.

மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு வனத்துறையினர் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். பீஞ்சமந்தை மலை கிராமத்தில் விரைவில் மினி பேருந்து இயக்கவும் ,செல்போன் டவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், தமிழகம் முழுவதும் வனம் சார்ந்த பகுதியில் வாழும் மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு சாலைகள் அமைக்கும் பணியிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்சை மந்தை மலை கிராமத்தில் அடிப்படை வசதிகளான சாலை குடிநீர் உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்த 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பீஞ்சமந்தை, பாலாம்பட்டு உட்பட 18 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வனத்துறை சார்ந்த திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பீஞ்சமந்தை மலை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய முன்மொழிவுகள் பெறப்பட்டு துணை மின் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் சுஜாதா உள்பட பலர் பங்கேற்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 331

    0

    0