பிசுபிசுத்துப் போன போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்… கொளுத்திப்போட்ட அமைச்சர் துரைமுருகன்..!!
Author: Babu Lakshmanan10 January 2024, 2:54 pm
வேலூர் ; தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் பிசுபிசுத்துப் போனதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி காட்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள
4 லட்சத்து 49 ஆயிரத்து 311 பேருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது :- அண்மையில் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்த மழை அந்த மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மழையின் காரணமாக அந்த பகுதிகளில் 750 ஏரிகள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையும் சரி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆட்சியாளர்கள் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்றார்கள். அதற்கு வட்டி கட்ட வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. அதனையும் செலுத்தி மேலும் மக்களுக்கான அரசின் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருந்த போதிலும், திட்டங்களை நிறைவேற்றியும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் தமிழக அரசு சரி செய்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகனிடம் தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “பெரும்பாலோனோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் பிசுபிசுத்தது,” என்று கூறினார்.
துணைவேந்தர் நியமன குழுவில் ஆளுநர் திரும்ப பெற்றது வரவேற்கதக்கது என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.