ராமஜெயம் கொலை வழக்கு… கருத்து ஏதும் சொல்ல முடியாது ; அமைச்சர் கே.என்.நேரு!!
Author: Babu Lakshmanan22 October 2022, 3:38 pm
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக எந்தவித கருத்தும் சொல்ல முடியாது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி கலையரங்கத்தில் தொலைநோக்கு திட்ட ஆவணம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது :- முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திருச்சி மாநாட்டில் 7 துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை உருவாக்குவோம். அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் எந்தெந்த துறைகளில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஆய்வு செய்து, அந்தந்த துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்ய கூட்டம் நடத்தப்பட்டது.
குறிப்பாக ஏழை எளியோருக்கு தேவையான குடி தண்ணீர் உட்பட பல்வேறு திட்டங்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு குறிப்பு போன்று தயாரிக்கப்பட்டு இதன் படி தான் நடைமுறைப்படுத்தப்படும், எனக் கூறினார்.
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இன்று டிஜிபி விசாரணை நடைபெற உள்ளதே என்ற கேள்விக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசுகையில், “போலீஸ் விசாரணையில் உள்ளது. அதை பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்தார்.
முன்னதாக, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவிலும், தொடர்ந்து ராஜீவ் காந்தி நகரில் துணை நல மையம் திறப்பு விழாவிலும் கலந்துகொண்டனர்.