தாய் மொழியை ஊக்குவிக்கும் திட்டம்தான் தேசிய கல்விகொள்கை திட்டம் : மத்திய அமைச்சர் எல்.முருகன்..!!

Author: Babu Lakshmanan
13 July 2022, 8:58 pm

மதுரை : தாய் மொழியை ஊக்குவிக்கும் திட்டம் தான் தேசிய கல்விகொள்கை திட்டம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியபோது :- மதுரையில் குரு பூர்ணிமா நாளில் பட்டமளிப்பு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சக்தி வாய்ந்த தமிழர்கள் உலக முழுவதிலும் ஆட்சி செய்து வருகிறார்கள். கூகுள் சுந்தர்பிச்சை, சிவநாடார், விஷ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பெருமை சேர்த்துவருகின்றனர். தமிழ் மொழியை உலகம் முழுவதிலும் எடுத்து சென்றவர் பிரதமர் மோடி. ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என கூறி பேச்சை தொடங்கியவர் மோடி.

வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கவிஞர் பாரதியாரின் பெயரில் இருக்கை அமைத்துள்ளவர் மோடி. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழ்மொழி பெருமையை பரப்பி வருகிறார். தற்போதைய இளைஞர் சமூகம் இந்தியாவை ஆளும் சமூகமாக உலகளவில் செல்லக்கூடியவர்களாக மாறுவார்கள்.

வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். கொரோனா சவாலை கடந்து இந்தியா பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளோம். 8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது. இப்போது எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். 200 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளோம்.

மாணவர்களின் நலனில் இந்திய அரசின் பங்கு எப்படி உள்ளது தெரியும். உக்ரைன் போரின் போது அங்கு இருந்த ஆப்ரேசன் கங்கா மூலமாக 23 ஆயிரம் மாணவர்களை இந்தியாவிற்கு திரும்ப அழைத்துவந்த்து என்ற பெருமிதம் உள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க மேக் இன் இந்தியா திட்டம் மூலம் தொழில்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

யோகா உலக நாடு முழுவதிலும் போற்றப்படுகிறது. கொரோனா நேரத்தில் சிறிதளவு மருந்தாக இருந்தது. 75ஆவது சுதந்திர ஆண்டில் யோகா கலையை உலக முழுவதும் எடுத்துசென்றுள்ளோம். நாம் இந்தியனாக, தமிழனாக உலகையே ஆண்டு கொண்டுள்ளோம். 100வது சுதந்திர தின ஆண்டில் இந்தியா முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது. உலக முழுவதுமாக விளையாட்டு போட்டிகளில் இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர். மாவட்டம் தோறும் விளையாட்டு திடல் அமைப்பது என்பது பிரதமரின் கனவு, என பேசினார்.

தொடர்ந்து பேசிய முருகன், தாய் மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக தான் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விகொள்கை முறையில் தான் தாய் மொழியில் நம்முடைய கருத்துகளை படிக்க முடியும். உலகெங்கும் முன்னேற்றும் கல்விகொள்கையாக தேசிய கல்விக்கொள்கை இருக்கும். தாய் மொழி கல்வியை ஊக்குவிக்கதான் தேசிய கல்விக்கொள்கை திட்டம் உள்ளது, பேசினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 707

    0

    0