உங்களுக்கு வேண்டுமா..? நீங்களே மத்திய அரசுகிட்ட கேட்டு வாங்குங்க ; அன்புமணிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 8:56 pm

மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களுக்கு தேவையென்றால் அன்புமணி ராமதாஸ் இணக்கமாக உள்ள பாஜக அரசிடம் பேசி கேட்டு பெறலாம் என்று கரூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 1.77 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டார். இதில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட அமைக்கப்படவில்லை என சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு, மருத்துவக் கல்லூரியை புதிதாக அமைப்பது மட்டும் வேலையில்லை. தமிழகத்தில் அமைந்துள்ள 34 மருத்துவ கல்லூரிகளும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகே முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது. அவற்றுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, போதுமான நிதிகளை ஒதுக்கீடு செய்து, தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் இல்லாததால், மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸுக்கு தேவை என்றால், தற்போது அவர் இணக்கமாக உள்ள மத்திய பாஜக அரசிடம் பேசி கேட்டு பெறலாம், என்றார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிடி ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுவது மற்றும் மருத்துவ கழிவுகள் மற்றும் பொது கழிவுகள் ஒன்றாக கலந்து வைக்கப்படுவது சம்பந்தமான புகார் குறித்த கேள்விக்கு, உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…