முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சனம்… அக்கறை இல்லாதவர் ஆளுநர் ; அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்ளை..!!
Author: Babu Lakshmanan6 June 2023, 2:29 pm
முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்ச்சிப்பவர்கள் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் கூறும் விமர்சனம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி 169 வார்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் ‘அண்ணா சாலை’ பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, எல்சிஜி சாலையில் 14.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் நியாய விலை அங்காடியை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது ;- சென்னை சைதாப்பேட்டை அண்ணா சலையில் மெட்ரோ பனி காலி இடங்களில் மாநகராட்சி சார்பில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 169வது வார்டில் நியாயவிலை கடை அமைக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் Ldg சாலையில் 14.5 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையும், வேளச்சேரி – சின்னமலை இணைப்பு சாலையில் 16 லட்சம் மதிப்பில் மேலும் ஒரு புதிய ரேஷன் கடையும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் , சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது என்ற கேள்விக்கு, “இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம். தொடர்ந்து அது குறித்து பேசினால் நன்றாக இருக்காது. ஆளுநரும் தெரியாமல் பேசி வருகிறார். எனவே இது குறித்து விமர்சனம் செய்யாமல் இதோடு முற்றுப்புள்ளி வைக்கிறோம்,” என தெரிவித்தார்.
மேலும், மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு மத்திய அரசு 15 சதவீதம் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்
தேசிய தரவரிசை பட்டியலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி 11வது இடம் பிடித்தது மகிழ்ச்சி. கடந்த முறை 16வது இடத்திலிருந்து தற்போது 11வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் எந்த அரசு கல்லூரியும் இடம்பெறவில்லை. பதினோராவது இடத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனை வந்துள்ளது.
தர்மபுரி, திருச்சி, சென்னை ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் விவகாரத்தில் இன்று நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எவ்வித பிரச்சனையும் இருக்காது. விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளோம்.
முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கை குறித்த கேள்விக்கு, தமிழகத்தின் வளர்ச்சி குறித்த அக்கறை இல்லாதவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பெரிய அளவில் கவலைப்படாதவர்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து யோசிக்கவே தெரியாதவர்கள் சொல்கிற விமர்சனம் இது. இது ஆளுநர் உள்ளிட்ட எல்லோருக்கும் பொருந்தும், எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.