அண்ணாமலை ஒரு உளறல் வாயன்… குமரியில் போட்டியிட தைரியம் இருக்கா..? அமைச்சர் மனோ தங்கராஜ் சவால்..!!

Author: Babu Lakshmanan
3 July 2023, 5:05 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலிலோ, பாராளுமன்ற தேர்தலிலோ போட்டியிட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தைரியம் இருக்கிறதா? என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஒன்றிய செயலாளர் ஜான்சன் தலைமையில் நடந்த திமுக குடும்ப விழாவில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது:- பாஜகவினர் சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவேன் என்றார்கள். கொண்டு வந்தார்களா? செங்கல்லுடன் நிற்கிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார்கள். கொடுத்தார்களா..?

இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைக்காக ஜூலை போராட்டம் நடத்தினார்கள். ஜூலை வந்து விட்டது. ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டது. யாருக்காவது கொடுத்தார்களா?. வடநாட்டு கம்பெனியை ப்ரொமோட் செய்ய திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கின்றனர். முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சியில் ஆவின் இந்தியாவிலேயே தலை சிறந்த நிறுவனமாக மாறும். அதற்கான அனைத்து கட்டமைப்புகளும் தமிழகத்தில் உள்ளது. வடநாட்டு ஆட்சியாளர்களின் கைக்கூலிகள். வடநாட்டு கம்பெனிகளை ப்ரொமோட் செய்ய ஆவினுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.

அண்ணாமலை ஒரு உளறல் வாயன். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. ஏதாவது நல்ல கருத்தை பேசுகிறாரா..?. உலகிலேயே ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சி உறுப்பினர்களை பகீரங்கமாக ED, CBIஐ வைத்து பயமுறுத்தி, பண பலத்தை வைத்து விலைக்கு வாங்கி எங்காவது உண்டா..?. தக்க பாடம் விரைவில் கிடைக்கும். ஆனால், இது தமிழ் நாட்டில் நடக்காது. தமிழ்நாடு கலைஞரின் பாசறை. அவர்களின் எந்த செயலும் இங்கு எடுபடாது. கொள்கையால் கட்டப்பட்ட இந்த இயக்கத்தை பிரிக்கவே முடியாது.

மணிப்பூரில் வெறுப்பு பிரச்சாரத்தை முன் வைத்து கலவரத்தை தூண்டி, பகைமையை உண்டாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இதன் முதல் குற்றவாளி பாஜகவும், அந்த கட்சியில் உள்ள அமைச்சர்களும் தான். அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால், கன்னியாகுமரியில் போட்டி போட சொல்லுங்கள். நாங்கள் யார் என காட்டுகிறோம். அண்ணாமலை சட்டமன்ற தேர்தலிலோ, பாராளுமன்ற தேர்தலிலோ போட்டியிட தைரியம் இருக்கிறதா?., நாங்கள் அவரின் டெபாசிட்டை இழக்க செய்வோம், என்றார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!