பாஜக கூட்டணியில் சேர்வது முதலை வாயில் சிக்குவதைப் போன்றது ; அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 9:41 pm
Quick Share

பாஜக கூட்டணியில் சேர்வது முதலை வாயில் அகப்பட்டதை போன்று ஆபத்தானது என்று அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிபாலத்தின் கீழ் பகுதியில் பரளியாற்றின் குறுக்கே மாத்தூர் முதலார் பகுதிகளுக்கிடையே ஏழுகோடி ஏழுலட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது :- ஆசியாவின் புகழ் பெற்ற மாத்தூர் தொட்டி பாலத்தை கட்டிய காமராஜருக்கு இங்கு உமையவிருக்கும் பூங்காவில் சிலை வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கும். அது முதலையின் வாயில் அகப்பட்டதை போன்று ஆபத்தானது.

அதிமுக, ஷிண்டே போன்றவர்கள் பட்டபாடு தெரியும். பல்வேறு மாநிலங்களில் இது போன்ற வரலாறு உள்ளது. அவர்கள் செய்யும் இந்த தவறுக்கெல்லாம் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். பாஜக அரசு மதத்தை வைத்து அரசியில் செய்வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி பலவீனமடைந்ததாக கூற முடியாது. கூட்டணியில் சிலர் இருப்பார்கள், போவார்கள்.

எங்களை பொறுத்தவரையில் பாஜக பொதுவான எதிரியாக உள்ளது. பாஜகவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மக்கள் உள்ளனர். தேர்தலுக்கு பிறகு பாஜகவிற்கு எதிராக ஒருமித்த கருத்து உருவாகி பாஜக அகற்றப்படும். திமுக கூட்டணி உறுதியாக வெல்லும், தமிழக பாஜக மண்ணை கவ்வும்.

திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டுகள் கூறப்படுவதை பொறுத்தவரையில் வருமான வரித்துறை, அமலாக்கதுறை, சிபிஐ வைத்துகொண்டு பல்வேறு மிரட்டல்களை செய்கிறார்கள். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள், பல்வேறு குற்றசாட்டுகளுக்கு உள்ளானவர்கள் பாஜகவில் உள்ளனர். அவர்களை பற்றி பேசப்படுவது இல்லை. ஷிண்டே என்ன யோக்கியரா…?

பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெல்லும் என்ற கருத்துகணிப்பு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த காலங்களில் பல்வேறு கருத்துகணிப்புகள் தவிடு பொடியாகியுள்ளது. மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்காததால் டெல்லியில் சென்று பல்வேறு மாநில முதல்வர்கள் போராட வேண்டிய அசிங்கமான நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜக மண்ணை கவ்வும். மாநிலத்திற்கு தரவேண்டிய நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. சாதாரண மக்களுக்கும் இது தெரியும். பணத்தில் கைவைத்த பிறகு என்ன செய்யமுடியும். நம்முடைய பண்பாட்டையும், கலாசாத்தையும் அழிக்க முற்படுகிறார்கள். நிதி தராதது குறித்து கேட்டால் மத்திய நிதி அமைச்சர் ஆணவத்தில் பேசுகிறார். பொருளாதாரத்தில் நம்மளை நலிவடைய செய்துவிட்டால், நமது இனத்தை கலாசாரத்தை அழித்துவிடலாம் என்ற திட்டத்துடன் பாஜக அரசு செயல்படுகிறது, எனவும் அவர் கூறினார்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 310

    0

    0