அனைத்து துறை நிர்வாகத்திலும் அமைச்சர் மனோதங்கராஜ் மகனின் தலையீடு… மாவட்ட பஞ்சாயத்து தலைவர் குற்றச்சாட்டு…!!
Author: Babu Lakshmanan21 February 2024, 2:41 pm
கன்னியாகுமரி மாவட்ட அனைத்து துறை நிர்வாகத்திலும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மகன் ரிமோன் தலையீடு உள்ளதாக நாகர்கோவில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி கூட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து தலைவரும்,திட்டக்குழு தலைவருமான டாக்டர் .மெர்லியன்று தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி சாதாரண கூட்டம் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான மெர்லியண்ட் தாஸ் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் திட்டங்கள் தொடர்பான மாத செலவினங்கள் மற்றும் வளர்ச்சி உள்ளிட்டவை இக்கூட்டத்தில் ஆலோசனை நடைப்பெற்றது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்கக்கூடிய கனரக வாகனங்களை இணைப்புச் சாலைகளில் இயக்குவதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது. எனவே கொடுக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் படி கனரக வாகனங்களை இயக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவரது மகன் ரிமோன் அனைத்து துறை அதிகாரிகளையும், அலுவலர்களையும் தன் விரல் நுனியில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேபிள் டிவி நெட்வொர்க் 15,000 குறைந்துள்ளது. காரணம் தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்களை பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் மகன் ரிமோன் நெருக்கடி கொடுக்கிறார். தங்களின் நெட்வொர்க்கிற்கு மாற வேண்டும். இல்லையென்றால் தாங்கள் நடத்தி வரும் கேபிள் டிவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பதால், 15 ஆயிரம் அரசு கேபிள் டிவி நெட்வொர்க் குறைந்துள்ளதாக மெர்லியண்ட் தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வருகின்ற மாசி திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். தற்போதும் இயக்கப்படுகிறது. ஆனால் மகளிர்க்கு இலவச பேருந்துகள் இயக்குவது போன்று அனைத்து சிறப்பு பேருந்துகளையும் இலவச பேருந்துகளாக இயக்க வேண்டும். இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கக்கூடிய மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் என்பதால், பெண் பக்தர்கள் அதிகமாக வருவதால், அனைத்து பேருந்துகளையும் இலவசமாக இயக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.