எம்எல்ஏ, கவுன்சிலர்-னா சும்மாவா..? கல்வெட்டில் விட்டுப் போன பெயர்கள்… அமைச்சரின் விழாவில் வாக்குவாதம்..!!
Author: Babu Lakshmanan20 July 2023, 9:54 pm
அமைச்சர் பங்கேற்ற பல்வேறு அரசு விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கவுன்சிலர் ஆகியோர் புறக்கணிக்கப்படுவதாக விழா மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று அமைச்சர் மெய்ய நாதன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாருக்கு தெரியாமல் விழா அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு திறப்பு விழா செய்ததாக விழா மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக குற்றம் சாட்டினார். யாரிடம் சொல்லிவிட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தீர்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் வாக்குவாதம் நடத்தினார்.
அப்போது, செய்தியாளர்கள் இருப்பதை உணர்ந்த அமைச்ச் மெய்யநாதன், ‘3வது கண் இருக்கிறது. பார்த்து பேசுங்கள். கல்வெட்டில் பெயரை சேர்க்க சொல்லியாச்சு,” எனக் கூறுகிறார். ஒருகட்டத்தில் கவுன்சிலர் வாக்குவாதம் செய்யவே, வேண்டுமானால் நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாமா..? என்று அமைச்சர் கேட்கிறார்.
இந்த சம்பவம் நிகழ்ச்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.